- எந்த ஒரு பொருளையும், பைபிளில் ஆராய்வதற்கு முன்னால், சில அடிப்படை சத்தியங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- “தூய ஆவியால், ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள், கடவுள் அருளியதை உரைத்ததே பைபிள்” – 2பேது 1:21
- கல்வி அறிவு இல்லாதவர்களும், விசுவாச உறுதியற்றவர்களும், சில வேளைகளில், பைபிளுக்கு “பொருள் திரித்து” கூறுவது உண்டு – 2பேது 3:16.
- மேலும், பைபிளில், புரிந்து கொள்வதற்கு “கடினமான” சில பகுதிகளும் உள்ளன – 2பேது 3:16.
- ஆனால், பைபிளின் எந்த பகுதியும், எவரது “சொந்த விளக்கத்திற்கும்” உட்பட்டது அல்ல – 2பேது 1:20.
- ஒருவர், பைபிளில் விளக்கங்கள் கொடுக்கத் தொடங்குமுன், மேற்சொன்ன சில பகுதிகளை மனதிற் கொள்ள வேண்டும்.
I.முதல் கருத்து - 2பேது 1:21
a. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்
b. கடவுள் அருளியதை உரைத்ததே பைபிள் .
a.தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்:
- தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களுடைய வெளி அடையாளம், ஆவியின் கனிகள் - கலா 5:22,23.
- ஒருவருடைய கனிகளைக் கொண்டே, அவரை அறிந்து கொள்ளலாம் - மத் 12:33, 7:16-20.
- அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், சாந்தம், விசுவாசம், தன்னடக்கம் என்ற கனிகள், உடையவரே தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்.
- மேலும், ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், எழுதியதற்கு, “பொருள்” கூறுபவர்களும், ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய் இருத்தல் வேண்டும்.
- இன்னுமாய், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களிடம், ஞானம், மெய்யுணர்வு, அறிவுத்திறன், ஆற்றல், நுண்மதி, இறையச்ச உணர்வு, ஆகியவையும், கூடவே இருக்க வேண்டும் - எசா 11:2.
b. கடவுள் அருளியதை:
- இங்கே, “கடவுள்” என்று கூறும் போதே, அவர் “அன்பானவர்” என்பதை அறிவோம் - 1யோவா 4:8,16.
- அன்பான கடவுள், அருளியதெல்லாம் அன்பாகவே இருக்கும்.
- எனவே, பைபிள் என்பது, முழுக்க முழுக்க, “கடவுளின் அன்பே”
- அங்கு சொல்லப்பட்டவை எல்லாமே, கடவுளுடைய “அன்பின் வெளிப்பாடே”.
- எனவே, முழுக்க முழுக்க கடவுளுடைய “அன்பின் வெளிப்பாடான” பைபிளுக்கு “பொருள்கூற” விரும்புபவர், முழுக்க முழுக்க கடவுளுடைய அன்பைக் கொண்டவராய் இருத்தல் வேண்டும்.
- இந்த கடவுளுடைய அன்பு, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு, அருளப்படுகின்றது – உரோ 5:5.
- இந்த அன்பு 1. பொறுமையுள்ளது, 2.நன்மை செய்யும், 3. பொறாமைப்படாது, 4. தற்புகழ்ச்சி அடையாது, 5. இழிவானதைச் செய்யாது, 6. தன்னலம் தேடாது, 7. எரிச்சலுக்கு இடம் தராது, 8. தீங்கு நினையாது, 9. தீவினையில் அகமகிழாது, 10. உண்மையில் அகமகிழும், 11. சகலமும் தாங்கும், 12. சகலமும் விசுவசிக்கும் 13. சகலமும் நம்பும், 14. சகலமும் சகிக்கும் - 1கொரி 13:4-7.
- எனவே, பைபிளுக்கு “பொருள் கூற” விரும்புபவர், தன் அக, வெளி வாழ்வில், கடவுளின் அன்புக்கு, “பிரதி பிம்பமாக” இருக்க வேண்டும்.
கடவுளுடைய அன்பே பைபிள்:
- கடவுளுடைய “அன்பின் வெளிப்பாட்டு நூலே” பைபிள்.
- பைபிளில் கடவுளுடைய அன்பை மட்டுமே, காண வேண்டும். காரணம், எல்லாவற்றிலும், அவருடைய அன்பே பைபிளில் வெளிப்படுகிறது.
பைபிளில் காணும் கடவுளுடைய அன்பு:
- நல்லோர் மேலும், தீயோர் மேலும், கதிரவன் உதிக்கும் அன்பு – மத் 5:45.
- நீதியுள்ளோர் மேலும், நீதியற்றோர் மேலும், மழை பொழியும் அன்பு – மத் 5:45.
- பகைவருக்கும் அன்பு செய்யும் அன்பு – மத் 5:44.
- ஏழு எழுபது முறை மன்னிக்கும் அன்பு – மத் 18:22.
- சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கும் அன்பு – லூக் 23:34.
- அவர்கள் அறியாமையை பொறுத்துக் கொண்ட அன்பு – லூக் 23:34.
- நொடிப்பொழுதே கோபமுற்று, முடிவில்லாமல் அன்பு செய்யும் அன்பு – எசா 54:7,8.
- மனித பாவங்களுக்கு காரணமான, அவனுடைய பாவ இதயத்தை எடுத்துவிட்டு, தூய இதயத்தை அருளும் அன்பு – எசே 36:26,27.
- மனிதனுடைய இதயத்தில் இருக்கும், உலக, மாமிச, பிசாசின் விருப்பங்களை எடுத்துவிட்டு, தம்முடைய விருப்பங்களை மனித இதயத்தில் பொறித்து வைக்கும் அன்பு – எபி 10:16, எரே 31:33
- மனிதனுடைய பாவ நிலைக்கு தாழ்ந்து வந்து, அவனை மீட்கும் அன்பு – பிலி 2:6-8.
- மனிதன் அழியக்கூடாது என்றும், “எப்படியேனும்” அவன் மனம் திரும்ப வேண்டும் என்றும், “விரும்பும்” அன்பு – எசே 18:23.
- மனிதனை மன்னிக்கவும், அவனுக்கு இரக்கம் காட்டவும், காத்திருக்கும் அன்பு – எசா 30:18.
- மனிதனை தன்பால் ஈர்த்துக்கொள்ள, துன்ப சோதனைகள் தரும் அன்பு – ஓசே 5:15.
- ஒரு தகப்பனைப் போல, கண்டிக்கும், தண்டிக்கும் அன்பு – எபி 12:7; நீ.மொ 3:12.
- திருத்தி, மீட்க மாத்திரமே, மனிதனை தண்டிக்கும் அன்பு – எபி 12:7;நீ.மொ 3:11.
- மனிதனை மீட்கும் பொருட்டு, அவன் மீது விழ வேண்டிய தண்டனையை, தன்மீது ஏற்றுக்கொண்ட அன்பு – எசா 53:5.
- எசா 53 – ல் தன்னை முழுவதும் வெளிப்படுத்திய அன்பு
- பைபிளில், தாம் சொல்கின்ற, செய்கின்ற அனைத்திலும், மனிதனுடைய “மீட்பு” ஒன்றே “இறுதி விளைவாக” கொண்ட அன்பு – எசே 18:31,32.
II.இரண்டாவது கருத்து - 2பேது 3:16
a. கல்வியறிவு இல்லாதவர்,
b. விசுவாச உறுதியற்றவர்,
c. பொருள் திரித்துக் கூறுகின்றனர்.
a.கல்வியறிவு இல்லாதவர்
- இங்கே, கல்வியறிவு என்பது, உலகக் கல்வி அறிவு மட்டுமல்ல.
- “பைபிள் கல்வி” அறிவும் ஆகும்.
பைபிள் கல்வியில், என்னென்ன பாடங்கள் வருகின்றன?
- பைபிள் யார் யாரால், எவ்வெப்போது எழுதப்பட்டது?
- ஓவ்வொரு புத்தகமும் எழுதிய காலச் சூழ்நிலை.
- ஓவ்வொரு புத்தகமும் எழுதப்பட்ட காலத்தின் மொழியறிவு.
- பைபிள் புத்தகங்களின் எழுத்து முறை.
- பைபிள் அகழ்வாராய்ச்சி பற்றிய, அறிவும், தெளிவும்.
- பைபிள் கேனன் பற்றிய முழு அறிவு.
- ஓவ்வொரு புத்தகமும், எழுதிய காலத்தில் அவை என்னென்ன பொருட்களில் அறியப்பட்டன.
- எபிரேய, கிரேக்க, மொழிகளின் பைபிள் கால மொழியறிவு.
- யூதர்களுடையவும், அவர்களைச் சுற்றியிருந்த மக்களுடையவும், சரித்திர அறிவு.
- பைபிள் மொழிபெயர்ப்பு.
- மொழிபெயர்ப்பிலும், கருத்துப் பெயர்ப்பிலும் வரும் பிரச்சனைகள்.
- மூலத்துக்கு ஒத்திருக்கிறது என்று கூறும் அதிகாரம் யாருக்கு?
- இரண்டாயிரம் முதல், நாலாயிரம் ஆண்டுகால பைபிள் புத்தகத்தின் சரித்திரம்.
- இத்தனை ஆண்டுகளில், பைபிளை யார் பாதுகாத்தது? அது பாதுகாக்கப்பட்ட வரலாறு.
- பைபிள் எதற்காக எழுதப்பட்டது? அதில் எதைத்தான் நாம் தேட வேண்டும் என்ற அறிவு.
- “இந்த அறிவுகள்”, இல்லாதவர்களைத் தான், இங்கே வசனம் குறிக்கிறது.
b.விசுவாச உறுதியில்லாதவர்
- இவர்கள், ஆவிக்குரிய வாழ்க்கை வாழாதவர்கள் .
- இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெறாதவர்கள்.
- அப்படியே பெற்றிருந்தாலும், இறை விருப்பத்துக்கு தக்கபடி வாழாமல், உலக, மாமிச, ஈர்ப்புகளுக்கு அடிமைப்பட்டவர்கள்.
c.பொருள் திரித்துக் கூறுகின்றனர்
- இது ஒரு முக்கியமான விஷயம்.
- இருக்கிற பொருளை விட்டு விட்டு, வேறு பொருளைக் கூறுவது தவறு.
- பைபிளுக்கு பொருள் கூற, இவர்களுக்கு உரிமையே இல்லை.
- பைபிளே இதைக் கண்டிக்கின்றது.
III.மூன்றாவது கருத்து - 2பேது 3:16
"புரிந்து கொள்வதற்கு கடினமான பகுதிகள்"
- புரிந்து கொள்வதறகு கடினமான, சில காரியங்களும், பைபிளில் உள்ளன என்பதை, நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.
- பைபிளை எடுத்து, அதை விவாதப் பொருள் ஆக்குவதற்கு முன்னால், அதில், “புரிந்து கொள்ள கடினமான” பகுதிகளும் உள்ளன என்பதை, தாழ்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- அந்த பகுதிகளை தெரிந்து கொள்வதற்கு, ஆவியானவருடைய விசேஷ வழிநடத்தல் வேண்டும்.
- அத்தகைய கருத்து வேறுபாடுகள் மிகும் சந்தர்ப்பங்களில், “பைபிளை விசுவசிக்கும் எல்லா தரப்பினருடைய” கருத்துக்களையும், கேட்டு அறிய முயல வேண்டும்.
- தாழ்மையும், எளிமையும், அன்பும் நிறைந்த தேடலில், சத்தியங்கள் தெளிவாகும்.
IV.நான்காவது கருத்து - 2பேது 1:20
“சொந்த விளக்கம்”
- இப்படி ஒரு ஆபத்து இருப்பதை, பைபிள் ஏற்கெனவே எச்சரிக்கிறது.
- இதில், “ஆவியின் விளக்கம்” , “சொந்த விளக்கம்” என, இரண்டு விளக்கங்கள் வருகின்றன.
- “ஆவியின் விளக்கம்”, மீட்பை மையமாகக் கொண்டு, அன்பினால் உந்தப்பட்டு, கொடுக்கப்படுவது.
- அந்த விளக்கம், கேட்பவரின் இதயத்துக்கு, ஆறுதலும், விடுதலையும், வெளிச்சமும் அளிக்கும்.
- “சொந்த விளக்கம்”, விடுதலையின் நோக்கமின்றி, “தற்க அரங்குகளுக்கு” உரிய விளக்கங்களாக இருக்கும்.
- அங்கே, மனக்கசப்புகளும், காயங்களும், மனஸ்தாபங்களும், பிரிவினைகளும், மார்க்க பேதங்களும் வளரும்.
- அத்தகைய சுயநல விளக்கங்களை அலகை, தன் ஊழியர்கள் வழியாக, சபைக்குள் ஏவி விடுகிறான்.
- இந்த பின்னணியோடு, மேலும் சில கருத்துக்களை தியானிப்போம்.
பைபிளுக்கு பலவித விளக்கங்கள் :
- இன்று நாம் பைபிளுக்கு, பலவிதமான விளக்கங்களைப் பார்க்கிறோம்.
- அவ்வாறு விளக்கம் தருபவர்கள், அவரவர்களின் விளக்கங்களுக்கு உரியவாறு, பைபிளையும் வெளியிடுகின்றனர்.
- “கடவுள் இல்லா” கொள்கையுடைய நாத்திகர்களும், அவர்கள் கொள்கைகளுக்குத் தகுந்தவாறு, பைபிளுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
- அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், சோசலிசம் பேசுபவர்கள், இவர்களெல்லாம், அவரவர்களுடைய வழிகளுக்குத் தகுந்தபடியே, பைபிளுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
- சிறுவர் பைபிள், இளைஞர் பைபிள், மாணவர் பைபிள், பெண்கள் பைபிள், ஒடுக்கப்பட்டவர் பைபிள் என, ஒவ்வொரு வகுப்பினருக்கும், இசைந்த வகையில், பைபிளுக்கு விளக்கமளிக்கின்றனர்.
- இதிலெல்லாம் மேலாக, “இரண்டு முக்கியமான பிரிவினர்” பைபிளுக்கு விளக்கம் கொடுக்கின்றனர்.
இருவித பைபிள் விளக்கம்:
- பைபிளை விளக்கும் போது,
- 1. அதில் “என்ன எழுதப்பட்டுள்ளதோ” அதை அப்படியே எடுத்துக் கொண்டு, பைபிள் விளக்கம் தருகின்றனர் ஒரு பிரிவினர். 2. பைபிளில், இன்ன பகுதி, “எதற்காக சொல்லப்பட்டது” எனும் பொருள் கண்டு, விளக்கமளிக்கின்றனர் மற்றொரு பிரிவினர்.
- இந்த, “என்ன” பிரிவினரும், “எதற்காக” பிரிவினரும் தான், இன்று மிகுதியாக உள்ளனர்.
“என்ன” பிரிவினர் அதாவது “லிட்டரல்” விளக்கம் தருபவர் கருத்துப்படி:
- பைபிளில் என்ன சொல்லப்பட்டதோ, அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- எழுதியதற்கு மேல் படிப்பது பாவம்.
- கடவுள் எழுதியதற்கு மனிதன் விளக்கம் தர முடியாது.
- கடவுள் உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசுபவர் அல்ல.
- சொல்லப்பட்டதற்கு மேலே விளக்கம் தருபவர்கள், “இறுதிகால” குழப்பவாதிகள், போலி தீர்க்கத்தரிசிகள்.
- எனவே, எழுதியதை எழுதியபடியே விசுவசிப்போம்.
இவர்களின் விளக்கத்தில் :
- ஆதாம், ஏவாள் வரலாறு, “சரித்திரத்துக்கு முந்திய பகுதி” நிகழ்ச்சிகள் எல்லாமே, அப்படியே, வார்த்தைக்கு வார்த்தை பிசகாமல், பொருள் எடுத்துக் கொள்கின்றனர்.
- அதனை ஊர்ஜிதப்படுத்த, சில விஞ்ஞான சான்றுகளைக் கூட, இதற்கு தேடுகின்றனர்.
- இந்தக் கருத்தில் பார்த்தால், உலகம் தோன்றி, ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளே ஆகின்றன.
- உலகம் உருண்டையாக அல்ல, தட்டையாகவே இருக்கிறது.
- இதற்கு எதிரான அறிவியல் விளக்கங்களெல்லாம், பொய் பித்தலாட்டங்கள்.
“என்ன” விளக்கத்தில் அதாவது, “லிட்டரல்” விளக்கத்தில் வரும் சில, சிக்கல்கள்:
I. நடைமுறை சிக்கல்:
ஓரிரு உதாரணங்களோடு, இதைப் பார்ப்போம்.
உதாரணம் - 1
- ஒருவர், இரவில் தூங்கப் போகுமுன், வேலைக்காரரை அழைத்து, “அடே, நீ காலையில் எழுந்து, சென்னை வரைக்கும் போய் வர வேண்டும்” என்றார்.
- காலையில், தன் வேலைக்காரர் வருவார் என்று பார்த்தால், வரவில்லை.
- விசாரித்தாலும், எந்த தகவலும் இல்லை.
- மூன்று நாட்களுக்குப் பின், வேலைக்காரன் வீட்டுக்காரரிடம் வந்து, தலைவணங்கி நின்று, “ஐயா! தாங்கள் கூறியபடியே, நான் சென்னைக்கு சென்று வந்துவிட்டேன்” என்றான். அவன் செய்த தவறை உணராமலேயே பேசியதைப் பார்த்து, வீட்டுக்காரர் வியந்தார்.
- இங்கே என்ன தவறு நடந்திருக்கிறது என்றால், நாம் என்ன கூறுவோம்?
- தலைவர், “என்ன சொன்னார்” என்பதை மட்டுமே, வேலைக்காரன் பார்த்தான். அதை அவர், “எதற்காகச் சொன்னார்” என்பதை, யோசிக்கவில்லை என்போம்.
உதாரணம் - 2
- ஒருவர் நோய்வாய்ப்பட்டு, ஒரு நாட்டு வைத்தியரிடம் சென்றார்.
- அவர் நோயாளிக்கு மருந்துகளைக் கொடுத்துவிட்டு, என்னென்ன உணவுகள் உண்ண வேண்டுமென்று, ஒரு யோசனையும் கூறினார்.
- நோயாளி தினமும் காலையில் எழுந்து, ஒரு தேங்காயும், ஐந்து மாம்பழங்களும் உண்ண வேண்டும்.
- வைத்தியர் மேல், மிகுந்த விசுவாசமுள்ள நோயாளி, அவர் சொன்னதை, வரிக்கு வரி பிசகாமல், அப்படியே கடைபிடித்தார்.
- காலையில் எழுந்ததும், ஒரு தேங்காயை தோலுரித்து உண்ண ஆரம்பித்தார்.
- ஆனால், தொடர்ந்து அவரால் உண்ண முடியவில்லை.
- ஒரே வயிற்றுவலி, குமட்டல் என்று, நேராக வைத்தியரிடம் போனார்.
- அங்கே போய், விபரங்களைக் கூறினார்.
- எனவே, வைத்தியர் தன் நோயாளிக்கு, மீண்டும் விளக்கமாக அறிவுரை கூறினார்.
- “ஐயா நான் சொல்வதை, மீண்டும் கவனமாக கேளும். மேலே இருக்கிற பகுதியை எடுத்து தூரே போட்டுவிட்டு, உள்ளே இருக்கிற பருப்பை உண்ண வேண்டும். எப்படியும், இனிமேல் சில நாட்களுக்கு, தேங்காய் உண்ண வேண்டாம். மாம்பழம் மட்டும் உண்டால் போதும், போய் வாரும்” என்று கூறி, வயிற்று வலிக்கு, சில மருந்துகளையும் கொடுத்து அனுப்பினார்.
- அந்த விசுவாசமுள்ள நோயாளி, மறு நாள் காலை முதல், தேங்காய் உண்பதில்லை. ஆனால் மாம்பழத்தை உண்ணத் தொடங்கினார்.
- வைத்தியர் கூறியபடியே, மேலே இருந்த பகுதிகளை எல்லாம் எடுத்து, தூரே போட்டுவிட்டு, மாம்பழத்தின் உள்ளே இருந்த பருப்பை, உண்ணத் தொடங்கினார்.
- சில நாட்களில், மீண்டும் வயிற்றுவலி.
- நோயாளி மீண்டும் வைத்தியரிடம் சென்று, எல்லாம் விளக்கமாகக் கூறினார்.
- வைத்தியர், அந்த “விசுவாசமான” நோயாளியைக் கண்டு, திடுக்கிட்டுப் போனார்.
- இனி இவருக்கு மருந்து கொடுத்தால், தன் உயிருக்கே ஆபத்து என்று எண்ணி, நோயாளியை வேறு மருத்துவரிடம் அனுப்பி வைத்தார்.
II. கருத்துச் சிக்கல்:
- மேலும், பைபிளில் வசனங்களை மட்டும் பார்க்கும் போதும், சில கருத்துச் சிக்கல்களும் வருகின்றன.
உதாரணமாக, சில வசனங்களைப் பார்ப்போம்.
- “கடவுள் இல்லை” என்று பைபிள் சொல்கிறது – தி.பா 53:1.
- “நான் அவர்களைக் கைவிடுவேன்”, என்று கடவுள் கூறுகிறார் - இ.ச 31:17.
- “மக்களுக்காக மன்றாடவோ, பரிந்து பேசவோ வேண்டாம்” என்று கடவுள் கூறுகிறார் - எரே 7:16, 11:14, 14:11, 15:1.
- “உன் இதயத்தை நலமாக்க முடியாது”, என்று கடவுள் கூறுகிறார் - எரே 17:9.
- “என் திருமுன் மௌனமாயிருங்கள்” என்று கடவுள் கூறுகிறார் - எசா 41:1.
- “உங்கள் ஜெபத்தைக் கேட்கமாட்டேன்”, என்று கடவுள் கூறுகிறார் - எசா 1:15.
- “நான் உலகிற்கு அமைதியை கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்” என்று இயேசு கூறுகிறார் - மத் 10:34.
- “தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்” என்று இயேசு கூறுகின்றார் - மத் 10:35.
- “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்” என்று இயேசு கூறுகின்றார் - லூக் 12:49.
- இங்கே லிட்டரல் விளக்கம் கொடுப்பவர்கள், மேலே சொன்ன சில வசனங்களுக்கு, அப்படியே விளக்கம் கொடுத்தால் வரும் விளைவு என்ன?
- இவற்றுக்கு அப்படியே விளக்கம் தருவதாக இருந்தால், வேத விரோதிகளுடைய கை ஓங்கிவிடாதா?
- பைபிளுக்கு லிட்டரல் விளக்கம் கொடுப்பதால், வரும் தீமைகள் என்னென்ன என்பதை, ஆவிக்குரிய பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
III. பைபிளுக்குள் சிக்கல்:
- பைபிளில் சொன்னதை சொன்னபடியே எடுத்துக் கொள்ளும் லிட்டரல் விளக்கத்தால், பைபிளுக்குள் உள்ள அனேக குறைபாடுகளுக்கு பதில் தர முடியாது.
- ஒருசில உதாரணங்களை இங்கே தருகிறோம்
இன்றைய அறிவியலோடு மோதல்:
a. பூமி சுற்றி வருகிறது:
- பைபிளில் “லிட்டரல்” கருத்துப்படி, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது – யோசு 10:12-13.
- ஆனால், நிக்கோலாஸ் கொபேர்ணிக்கூஸ், கலிலியோ போன்ற, விஞ்ஞானிகள், பூமி, கதிரவனைச் சுற்றி வருகிறது என்று, கண்டு பிடித்திருக்கிறார்கள்.
b.உலகப் படைப்பு:
- பைபிளில், “லிட்டரல்” கருத்துப்படி, உலகமும் மனிதனும் தோன்ற, ஆறே நாட்கள் தான் ஆயின – தொ.நூ 1:1-2:4, வி.ப 20:11.
- ஆனால், டார்வின் என்ற விஞ்ஞானி, “படிப்படியான – பரிணாம வளர்ச்சி” யில் தான், உலகமும், படைப்புக்களும், மனிதனும் தோன்றியதாகவும், இவை ஒவ்வொன்றும் நிகழ, பல கோடி ஆண்டுகள் இடைவெளி இருந்தன என்று கூறுகிறார்.
c.உலகின் வயது:
- பைபிளில், “லிட்டரல்” கருத்துப்படி, தொ.நூ 5:1-32, 11:10-26 – ன்படியும், மோசே, யோசுவா, நீதித்தலைவர்கள், அரசர்கள், நாடுகடத்தல், ஆகிய காலங்களின் கணிப்புப்படியும், இரண்டு வகை விளக்கங்கள் உள்ளன. ஒரு பிரிவினர், மேற்கூறிய கணக்கு கூட்டல்படி, இயேசு கிறிஸ்துவின் காலம் வரை, உலகம் தோன்றி, 3483 ஆண்டுகளே ஆகின்றன என்பர். மற்றொரு பிரிவினரின் கருத்துப்படி, உலகம் தோன்றி, 6984 ஆண்டுகள் ஆயின என்பர்.
- ஆனால், இன்றைய அறிவியல் கருத்துப்படி, அண்டசராசரங்கள் தோன்றி, ஏறக்குறைய அறுநூறு கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம். பூமி தோன்றி, அறுபது கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம். மனிதன் தோன்றி, ஏறக்குறைய ஆறு கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.
பைபிளுக்குள் மோதல்:
- லிட்டரல் விளக்கம் கொடுப்பவர்களுடைய கருத்துக்களை, அப்படியே எடுத்துக் கொண்டால், பைபிளுக்குள்ளும் மோதல் உருவாகும்.
- ஓரிரு உதாரணங்களைப் பார்ப்போம்:
a.நோவாவின் பேழையில் மிருகங்கள்:
- தொடக்கநூல் 6:19-20 – ன்படி, பேழையில் இரண்டு இரண்டு ஜோடி மிருகங்கள் நுழைந்தன என்று பார்க்கிறோம்.
- ஆனால், தொ.நூ 7:2-3 ன்படி, பேழையில் ஏழு ஜோடி மிருகங்கள் வீதம் நுழைந்தன என்று காண்கிறோம்.
b.எகிப்தில் தங்கிய காலம்:(மூன்று தலைமுறையினர்)
I
- லிட்டரல் விளக்கம் கொடுப்பவருடைய கருத்துப்படி, இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் வாழ்ந்த காலம், 430 ஆண்டுகள் - வி.ப 12:40 முதல்.
- ஆனால், கீழ்க்காணும் கணிப்பை பார்ப்போம்.
- எகிப்திலிருந்து கானானுக்குப் புறப்படும் போது, மோசேக்கு 80 வயது – வி.ப 7:7.
- அவருடைய பெற்றொரின் பெயர்கள், அம்ராம், யோக்கபேது – வி.ப 6:20.
- தாய் யோக்கபேது, அம்ரானின் தந்தை கோகாத்தின் சகோதரி – வி.ப 6:20.
- எகிப்துக்கு யாக்கோபோடு வந்தவர்களில், கோகாத்தும் ஒருவர் - தொ.நூ 46:11.
- இங்கே, யாக்கோபு எகிப்துக்கு போனதிலிருந்து, மோசே வரையிலும், (புறப்பாடு) மொத்தம் மூன்று தலைமுறையினர் - கோகாத்து, அம்ராம், மோசே.
II
- இதே கருத்தை, மற்றொரு வழிமரபினர் வரலாற்றிலும் காணலாம்.
- யோசேப்புக்கு, மகன் மனாசே எகிப்தில் பிறந்தார் - தொ.நூ 46:20.
- யோசேப்பு 110 ஆண்டுகள் வாழ்ந்தார். அப்போது, மனாசேயினுடைய மகன் மாக்கிரியின் குழந்தைகள், யோசேப்பின் மடியில் தவழ்ந்தார்கள் - தொ.நூ 50:23 முதல்.
- இந்த மாக்கிர் பிற்பாடு, மோசேயோடு வருவதைப் பார்க்கிறோம் - எண் 32:40.
- மாக்கிர் யோசுவாவோடும் வருகிறார் - யோசு 17:1.
- இங்கும் யோசேப்பு, மனாசே, மாக்கிர் என, மூன்று தலைமுறைகளே எகிப்தில் உருவானார்கள் என்று தெரிகிறது.
III
- ஆனால், இன்றைய குறைந்த கணக்குப்படி பார்த்தாலும், 430 ஆண்டுகளில், 10 தலைமுறைகளாவது இருந்திருக்க வேண்டும்.
- இங்கே, மூன்றே தலைமுறையினர், 430 ஆண்டுகள், எகிப்தில் தங்கி யிருக்கின்றனர்.
c.எகிப்திலிருந்து புறப்பட்டவர்களுடைய எண்ணிக்கை
- “லிட்டரல் விளக்கம்” கொடுப்பவர்கள் கருத்துப்படி, எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ராயேலருடைய எண்ணிக்கை, பெண்கள், குழந்தைகள் தவிர, ஆறு லட்சம் பேர் - வி.ப 12:37.
- மொத்த படையினரின் எண்ணிக்கை, ஆறு லட்சத்து மூவாயிரத்து ஐநூற்று ஐம்பது – எண் 1:46 (எண் 26:51).
- இன்னும் இப்படியே கூட்டிக்கழித்துப் பார்த்தால், பெண்கள் குழந்தைகள், முதியோர் எல்லாம் சேர்த்து, புறப்பட்டவர்கள் எண்ணிக்கை, இருபது லட்சத்தையும் தாண்டலாம்.
- ஆனால், இதன் உண்மைத் தொகையை சற்று அலசிப்பார்ப்போம்.
- “எகிப்துக்குப் போனவர்களின்” மொத்த எண்ணிக்கை 70 பேர் - தொ.நூ 46:26-27.
- இவர்கள் கருத்துப்படி, எகிப்தில் இந்த மக்கள் தங்கிய காலம் 430 ஆண்டுகள் என்றே வைத்துக்கொள்வோம்.
- இவ்வளவு காலத்துக்குள், 70 பேர், இத்தனை லட்சமாக, பலுகிப் பெருகினார்களா?
- மேலும், இஸ்ராயேலர் கானானை கைப்பற்றிய போது, அந்த நாட்டை அவர்கள் ஒரே நேரம் நிரப்பும் அளவிலான எண்ணிக்கையில் இல்லை – வி.ப 23:30.
- மேலும், இஸ்ராயேல் மக்கள், கனானேயரை விட, எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருந்தனர் - இ.ச 7:1,17, 9:1, 11:23.
- எழுதியதை எழுதியபடியே எடுத்தால், இத்தனை லட்சம் மக்கள், மூன்று தலைமுறையில், எப்படி பலுகினர்?
- இது போன்ற, இன்னும் பல கேள்விகளுக்கு பதில் கொடுப்பது, கடினமாகவே இருக்கும்.
d.பாசா மன்னனுக்கும், ஆசா மன்னனுக்கும் இடையே போர்:
- “லிட்டரல் விளக்கம்” கொடுப்பவர்களுடைய கருத்துப்படி, யூதாவின் அரசன் ஆசா ஆண்ட 36 –வது ஆண்டில், இஸ்ராயேல் அரசன் பாசா, யூதாவுக்கு எதிராகப் படையெடுத்துச் சென்றார் - 2குறி 16:1.
- ஆனால் சாலமோன் இறந்த ஆண்டு கி.மு 929.
- அப்போதே நாடு இரண்டாகப் பிரிந்தது – 1அர 12:16-24.
- யூதாவில் முதல் மன்னன் ரெஹோபாவாம், 17 ஆண்டுகள் ஆண்டான் - 1அர 14:21.
- அவன் மகன் அபியாம், 3 ஆண்டுகள் ஆண்டான் - 1அர 15:2.
- அவனுடைய மகன் ஆசா 40 ஆண்டுகள் ஆண்டான் - 1அர 15:9.
- அதே வேளையில், இஸ்ராயேலில் முதல் மன்னன், ஜெரோபாவாம், 22 ஆண்டுகள் ஆண்டான் - 1அர14:20.
- அவனுடைய மகன் நாபோத் 2 ஆண்டுகள் ஆண்டான் - 1அர 15:25.
- நாதாபின் மகன் பாசா, 24 ஆண்டுகள் ஆண்டான் - 1அர 15:33.
- மேலே சொல்லப்பட்டபடி, இரண்டு நாடுகளிலும், ஒரே ஆண்டில் தான், ஆட்சி ஆரம்பமாகிறது – 929 கி.மு – 1அர 12:21-24.
- முதல் ஆட்சி தொடங்கி – 22+2+24 மொத்தம் 48 ஆண்டுகளில், பாசா மன்னன் இறந்து விட்டான் (கி.மு 881) – 1அர 15:33.
- ஆனால், ஆசா ஆட்சி ஏற்ற, 36 –ம் ஆண்டில், பாசா யூதா நாட்டை எதிர்த்து வந்தான் - 2குறி 16:1.
- அதாவது, முதல் ஆட்சி தொடங்கி, 17 +3 +36 – 56 ஆண்டுகளுக்கு பிறகு, பாசா ஆசாவை எதிர்த்து வந்தான்.
- இரண்டு நாடுகளும், ஒரே ஆண்டில் ஆட்சி ஏற்றதாகப் பார்த்தோம் - 1அர 12:21-24.
- அதில் 48 –ம் ஆண்டில் பாசா இறந்தான் - 1அர 15:33.
- ஆனால் அவன், 56 –ம் ஆண்டில், ஆசாவை படையெடுத்து வந்தான் - 2குறி 16:1.
- அதாவது, பாசா தான் இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசாவைப் படையெடுத்துச் சென்றான்.
- லிட்டரல் விளக்கம் கொடுத்தால் வரும் சிக்கல்களைப் பார்த்தோமல்லவா?
e. ஆகாசின் வயது:
- ஆகாசு ஆட்சியேற்ற போது, அவனுக்கு 20 வயது. அவன் 16 ஆண்டுகள் எருசலேமை ஆண்டான் - 2அர 16:2.
- அதாவது, அவன் இறந்த போது, அவனுக்கு 36 வயது இருந்திருக்க வேண்டும்.
- மேலும், ஆகாசின் மகன் எசேக்கியேலைப் பற்றி கூறும் போது, அவன் ஆட்சியில் ஏறும் போது, அவனுக்கு வயது 25 – 2அர 18:2.
- அதாவது, 36 வயதுடைய தகப்பன் இறக்கும் போது, அவனது மகனுக்கு வயது 25.
- அப்படியென்றால், தகப்பன் 11 வயதிலிருக்கும் போது, அந்த மகனைப் பெற்றிருக்க வேண்டும்.
- ஆனால், லிட்டரல் விளக்கம் கொடுப்பவர்கள், இதற்கு பதில் தருவது கடினம்.
- இதோடு, இன்னும் அனேக அனேக காரியங்களைக் காட்டிக்கொண்டே செல்லலாம்.
முடிவாக
- இப்படியே லிட்டரல் விளக்கம் கொடுக்கப் போனால், அறிவியலோடும், ஏன் பைபிளுக்குள்ளேயும், நாம் மோதிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
- எனவே, பைபிளுக்கு லிட்டரல் விளக்கம் கொடுப்பது முறையானது அல்ல, என்பது, கடவுளின் விருப்பம்.
பைபிளும் பரிசேயரும்
- பைபிளுக்கு லிட்டரல் விளக்கம் கொடுப்பவர்கள், யூதர்களுடைய மத்தியிலும், இருந்திருக்கிறார்கள்.
- இவர்கள், “பரிசேயர்கள்” என்று அறியப்படுபவர்கள்.
- இவர்கள், பைபிளில் மிகுந்த விசுவாசமுடையவர்கள். எனவே, ஒவ்வொரு சட்ட ஒழுங்குகளையும், வள்ளி புள்ளி பிசகாமல், மக்கள் கடைபிடிக்க, இவர்கள் கட்டாயப்படுத்துவார்கள்.
- இந்த பரிசேயர்கள், பைபிளுக்கு லிட்டரல் விளக்கம் கொடுப்பவர்கள்.
- ஆனால், இயேசு பைபிளுக்கு லிட்டரல் விளக்கம் கொடுக்கவில்லை.
- இதனால், இயேசுவுக்கும் இவர்களுக்குமிடையே எப்போதும் மோதல் இருந்தது.
சில உதாரணங்கள்:
- இவர்கள், இயேசுவின் பேச்சில் குற்றம் காண காத்திருந்தனர் - மத் 22:15.
- அந்த நோக்கத்தோடேயே, வேதத்துக்கு விளக்கம் கேட்டனர் - மத் 22: 35,36.
- இயேசுவின் பழக்கவழக்கங்கள், திருச்சட்டத்தோடு இசைந்து போகவில்லை என்று குறை கூறினர் - மத் 9:9-14.
- இயேசு ஓய்வு நாளைக் கடைபிடிக்கவில்லை – மத் 12:1.
- இயேசு தூய்மைச் சடங்கை கடைபிடிக்கவில்லை – மத் 15:1
- இயேசு பாவத்தை மன்னித்தார் - லூக் 5:20,21.
- இயேசு பேய் ஓட்டினார் - மத் 12:24.
- இவர்கள், எவ்வளவு தீவிரவாதிகள் என்றால், “அவர்கள் பைபிளுக்கு அர்த்தம் கொடுத்தபடி, இயேசு இல்லை”, என்பதற்காக, அவரைக் கொல்லவும், தீர்மானித்தனர் - மத் 12:14, யோவா 18:3.
பைபிளுக்கு லிட்டரல் விளக்கமளித்த இந்த பரிசேயர்களைப் பற்றி, இயேசு என்ன கூறினார்?
- நீங்கள், பரிசேயர்களை விட, நேர்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் - மத் 5:20.
- பரிசேயர், விபச்சாரத் தலைமுறையினர் - மத் 12:38-39.
- பரிசேயர், தற்பெருமை காட்டியவர்கள் - மத் 9:9-13.
- பரிசேயர் திருச்சட்டத்தை பிறருக்கு சுமையாக்கியவர்கள் - மத் 23:4.
- பரிசேயர் தூய ஆவிக்கு எதிராய் பாவம் செய்தவர்கள் - மத் 12:31.
- பரிசேயர்கள், சமய சட்டங்களை திரித்துக் கூறுபவர்கள் - மத் 15:6.
- தாங்களே நீதிமான்கள் என்று காட்டியவர்கள் - லூக் 18:8-14.
- பரிசேயர்கள் வெளிவேடக்காரர்கள் - மத் 23 –ம் அதிகாரம்.
பரிசேயரான பவுல்:
- பவுல் ஒரு பரிசேயன் - தி.ப 22:3.
- இவர் பைபிளை பரிசேயரைப் போலவே, பொருள்படுத்திப் பார்த்தவர் - தி.ப 22:3.
- இயேசுவின் ஆதி ஆவிக்குரிய சீடர்களைக் கொல்ல சீறி எழுந்தார் - தி.ப 9:1.
- கொலை செய்வதாக, அச்சுறுத்தினார் - தி.ப 9:1
- தொடர்ந்து ஆவிக்குரிய சீடர்களைத் துன்புறுத்தவும், கொல்லவும் திட்டமிட்டார் - தி.ப 9:2.
- யூத சமயத்தின், மிகவும் கண்டிப்பான பரிசேயக்கட்சி முறைப்படி, வாழ்ந்து வந்தவர் பவுல் - தி.ப 26:5, 9-11.
- இன்றைய லிட்டரல் விளக்ககாரர்கள் கூட, ஒருவேளை பவுலைப்போன்ற, மாடர்ண் பரிசேயராக இருக்கலாம்.
- நல்ல எண்ணத்திலேயே, கிறிஸ்தவர்களை அவர்களும் துன்புறுத்தலாம்.
- தங்கள் கொள்கைகளுக்கு மாறான, கிறிஸ்தவ சபைகளுக்கு “பிடிசாபங்கள்” கொடுத்துக் கொண்டிருக்கலாம்.
- பவுலைப்போன்று, “நேர்மையான லிட்டரல் விளக்கம்” கொடுத்து வாழ்ந்து வந்தால், ஒருவேளை கடவுள் “நம்மவர்களையும்”, போகும் வழியில் சந்தித்து உண்மையை விளக்குவார்.
- ஆனால், நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமே!
பைபிளும் தீவிரவாதமும்
- யூதர்களில், பரிசேயர்கள், பைபிள் தீவிரவாதிகளாய் இருந்ததன், விளைவு என்ன?
- அவர்கள் இயேசுவைக் கொன்றார்கள்.
- இன்றும், “லிட்டரல் விளக்கக்காரர்களால்” அப்படி ஒரு காரியம் நடக்கிறதோ என, ஐயப்பட வேண்டியுள்ளது.
- இஸ்லாமிய தீவிரவாதிகள் தோன்றியதும், குறானுக்கு லிட்டரல் விளக்கம் கொடுப்பதால் தான்.
- குறானின் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்துக்கொண்டு, தங்கள் இனத்தையே, குண்டு வைத்து கொல்கிறார்கள், அழிக்கிறார்கள்.
- தங்கள் சமய போதனைக்கு, அவர்கள் பொருள் கொடுக்கின்றபடி வாழாத, அனைத்து மக்களையும், உலகிலிருந்து அழித்துப்போட வேண்டுமென்பது, அவர்களது போதனை.
- அதுபோலவே, இந்து சமய தீவிரவாதிகளும், இராமாயண, மகாபாரதத்தில் வரும், புராண அம்சங்களையும், சரித்திர உண்மைகளையும், ஏற்றுக்கொள்ள மறுத்து, அவற்றை லிட்டரலாக எடுத்துக்கொண்டு, பல தீவிரவாத நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.
- அங்கே சொல்லப்பட்டதெல்லாம், வரிக்கு வரி உண்மையே என்றும், அதன்படியே சரித்திரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று, அடம் பிடிக்கிறார்கள்.
- பைபிள் தீவிரவாதிகளும், இந்த வரிசையில் வருபவர்களே.
- மற்றவர்கள், தங்கள் லிட்டரல் கருத்துக்கு மாறுபட்டவர்களை அழிக்க, மனித வெடிக்குண்டு உருவாக்குகிறார்கள்.
- பைபிள் தீவிரவாதிகளும், மனித வெடிகுண்டுகளை, நித்தம் உருவாக்குகிறார்கள்.
- தங்கள் லிட்டரல் விளக்கப்படி நடக்காதவர்களை, வெறுத்து, பகைத்து, பழித்து, பிடிசாபங்களைக் கொடுத்து, பெரும் பிரளயமே தினம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
- தங்களைப் பின்பற்றும் விசுவாசிகளின் இதயங்களிலும், இத்தகைய அழிவுக்குரிய போதனைகளைப் புகுத்தி, விசுவாசிகளை மனித வெடிக்குண்டுகளாக மாற்றுகிறார்கள்.
- அவர்களும், போகுமிடமெல்லாம், வாழுமிடமெல்லாம், இந்த வெடிக்குண்டுகளை வெடித்து, குடும்பங்களை அழிக்கிறார்கள். உறவுகளை முறிக்கிறார்கள், சமுதாயங்களை கூறுபடுத்துகிறார்கள்.
- அவர்கள் போகின்ற, பேசுகின்ற இடமெல்லாம், பகை, சண்டை, தர்க்கம், பிரிவினை, மார்க்க பேதம், வெறுப்பு, வைராக்கியம் என, இன்னும் என்னென்ன உண்டோ, அத்தனையும் அருளாட்சி புரியும்.
- இந்த நிலை தொடர வேண்டுமா?
பைபிளில் வார்த்தையும் அதன் “உண்மையும்”
சில வசனங்களைத் தியானிப்போம்:
- என் வார்த்தைகள் வாழ்வு தரும், ஆவியைக் கொடுக்கின்றன – யோவா 6:63.
- வார்த்தையை கடைபிடித்தால், “உண்மையை” அறிந்தவர்களாயிருப்பீர்கள், உண்மை உங்களை விடுவிக்கும் - யோவா 8: 31,32.
- உங்களோடு என்றும் தங்கும்படி, வருபவர், “உண்மையை” வெளிப்படுத்தும் ஆவியானவர் - யோவா 14:16.
- தூய ஆவியார், முழு “உண்மையை நோக்கி”, உங்களை வழிநடத்துவார் - யோவா 16:13.
- “உண்மையே” உமது வார்த்தையின், “உட்பொருள்” – தி.பா 119:160.
விளக்கம்
- மேலே சொன்ன, வசனங்களைப் பார்க்கும் போது, பைபிளில் ஒவ்வொரு வார்த்தைக்கு உள்ளும், “உண்மை” ஒன்று இருக்கிறது.
- அந்த உண்மையே, நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருப்பொருள்.
- ஓவ்வொரு வார்த்தையிலும், உண்மை இருப்பதாகவும், அந்த உண்மையே நமக்கு விடுதலை தருவதாகவும், பைபிள் கூறுகிறது – யோவா 8:32.
- மேலும், வார்த்தைக்கு உள்ளிருக்கும் உண்மையை நோக்கி, ஆவியானவர், விசுவாசியை வழிநடத்துவாராம் - யோவா 16:13.
தோற்றப்பொருளும் – உட்பொருளும்
- பைபிளில், ஒவ்வொரு வார்த்தையிலும், தோற்றப்பொருளும் இருக்கும், உட்பொருளும் இருக்கும்.
- லிட்டரலாகப் பார்ப்பவர்கள், “தோற்றப்பொருளை” மட்டுமே பார்ப்பர்.
- தி.பா 53:1 – ல், “கடவுள் இல்லை” என்ற வார்த்தையின் தோற்றப்பொருள், கடவுள் இல்லை என்பது தான்.
- இது லிட்டரல் விளக்கம்.
- ஆனால், அதன் உட்பொருளைத் தேடினால், “என்று, அறிவிலி தனக்குள் கூறிக் கொள்கிறான்” என்பது தெரிய வரும்.
- தி.பா 119:160 –ன்படி, வார்த்தையின் உட்பொருளே “உண்மை”.
- நாம் உட்பொருளைத் தேட வேண்டுமென்றால், ஒரு வார்த்தை, அல்லது, ஒரு பகுதி, “எதற்காக சொல்லப்பட்டது” என்று அறிய வேண்டும். அப்போது, “உண்மையை” கண்டுகொள்வோம்.
“எதற்காகச் சொல்லப்பட்டது” என்பதும் உண்மையும்:
- எனவே, வார்த்தையின் “உண்மையை” கண்டுகொள்ள, “எதற்காக சொல்லப்பட்டது” என்ற “தேடுதல் விதியை” பயன்படுத்த வேண்டும்.
- அதாவது, பைபிளுக்கு விளக்கம் தேடுதல் விதியில், “என்ன சொல்லப்பட்டது” என்ற விதியை பயன்படுத்துவதால் வரும் சிக்கல்களை கண்டோம்.
- எனவே, இனி நாம், “எதற்காகச் சொல்லப்பட்டது” என்ற விதியை பயன்படுத்தி, பைபிளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் சரி, ஒரு பகுதிக்கும் சரி, விளக்கத்தை தெளிவாகப் பெற்றுக் கொள்ளலாம்.
- அந்த விளக்கமே, அந்த வார்த்தையின் அல்லது பகுதியின் - “உண்மை”.
“எதற்காக” என்ற கேள்வியும், “நிஜ பைபிளும்”:
- “நிஜ” பைபிள் என்றால், என்ன என்று பார்ப்போம்.
- அதாவது,
- பைபிள் எதற்காக எழுதப்பட்டது?
- பைபிளில் என்ன இருக்கிறது?
- பைபிளில் எதைத் தேட வேண்டும்? எதைத் தேடக்கூடாது?
- போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போது, நிஜ பைபிளைக் கண்டு கொள்ளலாம்.
பைபிள் ஒரு வெறும் சட்ட புத்தகமா?
- அரசர்கள், தங்கள் மக்களுக்கு, நல்லாட்சி நடத்தும்படி, சட்டங்களை இயற்றுவர்.
- மக்கள் அந்த சட்டத்தின்படி வாழ்ந்தால், அரசனுக்கு மகிழ்ச்சி, மக்களுக்கும் மகிழ்ச்சி.
- மற்றமக்களைப்போல, இஸ்ராயேல் மக்களும், அரசரை விரும்பினர்.
- ஆனால் இங்கே, கடவுளே அவர்களுக்கு ராஜாவாக இருந்தார்.
- அந்த ராஜாவுக்கு பிரமாணிக்கமுள்ள பிரஜைகளாக இருக்க, அவர்கள் கடைபிடிக்கும்படி, கடவுள் அவர்களுக்கு “சட்டதிட்டங்கள்” கொடுத்தார்.
- இதை யூதர்கள், “தோறா” அல்லது சட்டநூல் என்றனர்.
- எனவே, யூதர்கள் பைபிளை ஒரு “சட்டநூல்” என்று மட்டுமே பார்த்தனர்.
- அதே கண்ணில் நாமும் பார்த்தால், நமக்கும் அப்படியே தெரியும்.
வழக்கறிஞர்களும் - நீதிபதிகளும்
- பைபிளை ஒரு “சட்டபுத்தகமாக” வைத்து, அதன்படி தங்களை வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் மாற்றிக்கொள்ளும் “போதகர்கள்” இன்று மலிந்திருக்கிறார்கள்.
- பைபிளை ஒரு “கேனன்லா”வாகவும், “குற்றவியல் சட்ட புத்தகமாகவும்” பார்த்து, அதன்படி வழக்காடி, தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
- இது ஆவிக்குரிய (அன்பான) ஊழியமா? “சட்ட” ஊழியமா?
- அப்படியே விசுவாசிகளுக்கு துற்போதனைகள் வழங்கி, பயமுறுத்தி, பிடிசாப எச்சரிக்கைகள் கொடுத்து, இருட்டறைகளில் அடைத்து வைத்து, காவல் காக்கின்றனர்.
- இது தேவையா?
கடவுள் - மனித உறவு
- ஆனால், பைபிளுக்குள் புகுந்துப் பார்த்தால், கடவுள் மனித உறவு, ஒரு “அரச பிரஜை” உறவு அல்ல.
- மாறாக, அது “அப்பா – பிள்ளை” உறவு.
- அங்கே சட்டங்கள் ஆட்சி செய்யாது, “அன்பே” ஆட்சி செய்யும்.
- எனவே தான், பவுலினால் சட்டத்தை சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
- பவுல், கடவுளுக்குமுன், “கிருபையையும்”, தனக்குள் “விசுவாசத்தையும்” கண்டார்.
- எனவே, “கடவுள் - மனிதர் - உறவை” உருவாக்குவதும், வளர்ப்பதும், தேவ கிருபையும், மனித விசுவாசமுமே.
- அங்கே, “அன்பு” தான், எல்லாவற்றுக்கும் எல்லாமாயிருக்கிறது.
முடிவுரை:
- ஆக, கடவுள் தம் அன்பால், ஒரு அன்பின் சமூகத்தை உருவாக்கி, அந்த அன்பால், “கடவுள் - மக்கள்”, “மக்கள் - மக்கள்” உறவை உருவாக்குவதும், வளர்ப்பதுமே பைபிள்.
- இந்தக் கண்ணோடு பைபிளைப் பார்த்தால், பைபிள் என்பது என்ன? அது எதற்காக எழுதப்பட்டது? போன்ற கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கும்
- நன்றி http://www.catholicpentecostmission.in/Bible_Explanation.html
0 comments:
Post a Comment