அவர்கள் இருவரும் சூசன்னாமீது காமவெறி கொண்டிருந்தனர்.

1 பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்துவந்தார்.

2 அவர் சூசன்னாவை மணந்தார். சூசன்னா கில்கியாவின் மகள்; அவர் பேரழகி; ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்.

3 அவர் பெற்றோர் நேர்மையாளராய் இருந்ததால், தங்கள் மகளை மோசே சட்டத்தின் வழியில் பயிற்றுவந்தனர்.

4 யோவாக்கிம் பெரும் செல்வர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. ய+தர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப்பெற்றார்.

5 அக்காலத்தில் மக்களுள் முதியோர் இருவர் நடுவராய் நியமிக்கப்பெற்றனர். இவர்களைப்பற்றியே ஆண்டவர், "நடுவர்களாய் இருந்து மக்களை வழிநடத்த வேண்டிய மூப்பர்கள் வாயிலாகப் பாபிலோனின்று ஒழுக்கக்கேடு வந்துற்றது" என்று சொல்லியிருந்தார்.

6 இவர்கள் யோவாக்கிம் வீட்டில் நெடுநேரம் இருப்பது வழக்கம். வழக்குடையோர் அனைவரும் இவர்களை அணுகுவதுண்டு.

7 நண்பகல் வேளையில் மக்கள் சென்றபின், சூசன்னா தம் கணவரின் தோட்டத்திற்குள் சென்று உலாவுவார்.

8 அவர் நாள்தோறும் அங்குச் சென்று உலாவுவதைப் பார்த்துவந்த அந்த "முதியோர் இருவரும் அவரைக் காமுறத் தொடங்கினர்.

9 இதனால் அவர்கள் தங்கள் மனத்தைத் தகாத வழியில் செல்லவிட்டார்கள். விண்ணக இறைவனை நினையாதவாறும் நீதித் தீர்ப்புகளைக் கருதாதவாறும் அவர்கள் நெறி மாறிச் சென்றார்கள்.

10 அவர்கள் இருவரும் சூசன்னாமீது காமவெறி கொண்டிருந்தனர். ஆயினும் தங்கள் காமநோய்பற்றித் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளவில்லை;

11 ஏனெனில் அவளை அடைவதற்காகத் தாங்கள் கொண்டிருந்த காமவேட்கையை வெளியிட வெட்கப்பட்டார்கள்;

12 எனினும் அவரைக் காண ஒவ்வொரு நாளும் ஆவலோடு காத்திருப்பார்கள்.

13 ஒருநாள், "நண்பகல் உணவு அருந்த நேரம் ஆயிற்று. வீட்டுக்குப் போவோம்" என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் வெளியேறிப் பிரிந்து சென்றார்கள்.

14 ஆனால் திரும்பிவந்து அதே இடத்தில் கூடினார்கள். அதன் காரணத்தைச் சொல்லும்படி ஒருவர் மற்றவரை வற்புறுத்தவே, இருவரும் சூசன்னா மீது காமவேட்கை கொண்டிருப்பதை ஒப்புக் கொண்டனர். சூசன்னாவைத் தனியே பார்ப்பதற்கு ஏற்ற வாய்ப்பினைப்பற்றிச் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

15 அதற்கு ஏற்றதொரு நாளை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஒருநாள் சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு மட்டும் தோட்டத்தினுள் நுழைந்து, குளிக்க விரும்பினார்; ஏனெனில், அன்று வெயில் கடுமையாக இருந்தது.

16 அந்த முதியோர் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. அவர்களோ ஒளிந்திருந்து அவரைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

17 சூசன்னா பணிப்பெண்களிடம், "நான் குளிக்க எண்ணெயும் நறுமணப்பொருள்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை மூடிவிடுங்கள்" என்று சொன்னார்.

18 அவர் சொன்னவாறே அவர்கள் செய்தார்கள். தோட்டத்தின் வாயில்களை மூடிவிட்டு, அவர் கேட்டவற்றைக் கொண்டுவர ஓரக் கதவு வழியாக வெளியே சென்றார்கள்; ஆனால் அங்கு ஒளிந்துகொண்டிருந்த முதியோரைக் கவனிக்கவில்லை.

19 பணிப்பெண்கள் வெளியேறியதும் முதியோர் இருவரும் எழுந்து அவரிடம் ஓடோடிச் சென்றனர்.

20 அவரை நோக்கி, "இதோ! தோட்டத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல் வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கி எங்களோடு படு.

21 இல்லாவிடில், ஓர் இளைஞன் உன்னொடு இருந்தான் என்றும், அதற்காகவே நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பி விட்டாய் என்றும் உனக்கு எதிராக நாங்கள் சான்று கூறுவோம்" என்றார்கள்.

22 சூசன்னா பெருமூச்சுவிட்டு, "நான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டேன். நான் உங்களுக்கு இணங்கினால், எனக்குக் கிடைப்பது சாவு; இணங்காவிட்டால் நான் உங்களிடமிருந்து தப்பமுடியாது.

23 ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதைவிட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக் கொள்வதே மேல்" என்றார்.

24 பின் சூசன்னா உரத்த குரலில் கத்தினார். உடனே முதியோர் இருவரும் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டனர்.

25 அவர்களுள் ஒருவர் ஓடிப்போய்த் தோட்டத்துக் கதவுகளைத் திறந்தார்.

26 தோட்டத்தில் கூச்சல் கேட்டதும், சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்று அறிய அவர் வீட்டில் இருந்தோர் ஓரக் கதவு வழியே ஓடிவந்தனர்.

27 ஆனால் முதியோர் தங்கள் கட்டுக் கதையைச் சொன்னபொழுது, பணியாளர் பெரிதும் நாணங்கொண்டனர்; ஏனெனில் சூசன்னாவைப்பற்றி இது போன்ற எதையும் அவர்கள் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.

28 மறுநாள் சூசன்னாவுடைய கணவர் யோவாக்கிம் வீட்டில் மக்கள் திரண்டுவந்தார்கள். சூசன்னாவைக் கொல்லும் தீய நோக்குடன் அந்த முதியோர் இருவரும் சேர்ந்து வந்திருந்தனர்.

29 அவர்கள் மக்கள் முன்னிலையில், "கில்கியா மகளும் யோவாக்கிம் மனைவியுமான சூசன்னாவை இங்கு அழைத்து வருமாறு ஆளனுப்புங்கள்" என்று கட்டளையிட்டார்கள். உடனே அவரை அழைத்துவர ஆளனுப்பினர்.

30 சூசன்னா வந்தார். அவரோடு அவருடைய பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எல்லாரும் வந்தனர்.

31 சூசன்னா நற்பண்புடையவர்; பார்ப்பதற்கு அழகானவர்.

32 அவர் மூடுதிரை அணிந்திருந்தார். எனவே அவரது அழகைக் கண்டுகளிக்கும் பொருட்டு, அந்த மூடுதிரையை அகற்றி விடுமாறு அக்கயவர்கள் கட்டளையிட்டார்கள்.

33 ஆனால் அவருடைய உற்றார் உறவினரும், அவரைப் பார்த்தவர் அனைவருமே அழுது கொண்டிருந்தார்கள்.

34 முதியோர் இருவரும் மக்கள் நடுவே எழுந்து நின்று, சூசன்னா தலைமீது தங்கள் கைகளை வைத்தனர்.

35 அவரோ அழுதுகொண்டே விண்ணக இறைவனை நோக்கினார்; ஏனெனில் அவர் உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது.

36 அப்பொழுது முதியோர் பின்வருமாறு கூறினர்; "நாங்கள் தோட்டத்தில் தனியா உலாவிக் கொண்டிருந்தபொழுது, இவள் இருபணிப்பெண்களொடு உள்ளே வந்தாள்; தோட்டத்து வாயில்களை மூடியபின், பணிப்பெண்களை வெளியே அனுப்பி விட்டாள்.

37 பின்னர் அங்கே ஒளிந்துகொண்டிருந்த ஓர் இளைஞன் இவளிடம் வந்து இவளோடு படுத்தான்.

38 நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்; இந்த நெறிகெட்ட செயலைக் கண்டதும் அவர்களிடம் ஓடிச் சென்றோம்.

39 அவர்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்தோம். ஆனால் அந்த இளைஞனை எங்களால் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவன் எங்களைவிட வலிமை மிக்கவன். எனவே அவன் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டான்.

40 நாங்கள் இவளைப் பிடித்து, அந்த இளைஞன் யார் என்று கேட்டோம்.

41 இவளோ எங்களுக்கு மறுமொழி கூற மறுத்துவிட்டாள். இவற்றுக்கு நாங்களே சாட்சி. "அவர்கள் மக்களுள் மூப்பர்களாகவும் நடுவர்களாகவும் இருந்ததால், மக்கள் கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது.

42 அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, "என்றுமுள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும்.

43 இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டிருக்கிறதே!" என்று சொன்னார்.

44 ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார்.

45 கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்ட பொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டிவிட்டார்.

46 தானியேல் உரத்த குரலில், "இவருடைய இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை" என்று கத்தினார்.

47 மக்கள் அனைவரும் அவர்பால் திரும்பி, "நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினர்.

48 அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்; "இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள் ஒருத்தியைத் தீர்ப்பிடத் துணிந்து விட்டீர்களே! அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா?

49 நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள்; இம்மனிதர்கள் இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

50 எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள். மற்ற மூப்பர்கள் தானியேலிடம், "நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து, எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்" என்று வேண்டிக் கொண்டார்கள்.

51 அப்பொழுது தானியேல், "இவர்களைத் தனித்தனியே பிரித்துத் தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்" என்றார்.

52 எனவே அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள். அப்பொழுது தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, "தீச்செயலில் விளைந்தவனே! நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன.

53 "மாசற்றவர்களையும் நீதி மான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே" என்று ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி, மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய்.

54 இதோ! நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்" என்று கேட்டார். அதற்கு அவர், "விளாமரத்தடியில்" என்றார்.

55 அதற்குத் தானியேல், "நீ நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன்தலைமேலேயே விழும். ஏனெனில் கடவுளின் தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுவிட்டார். அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்" என்றார்.

56 பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்துவருமாறு பணித்தார். அவரை நோக்கி, "நீ ய+தாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன். அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்துவிட்டது.

57 நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக்கிறீர்கள். அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள். ஆனால் யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

58 இதோ! எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்" என்றார். அவரோ, "கருவாலிமரத்தடியில்" என்றார்.

59 தானியேல் அவரிடம், "நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன்தலைமேலேயே விழும். எனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும், இவ்வாறு உங்கள் இருவரையும் அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர் வாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.

60 உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பு அளிக்கும் கடவுளைப் போற்றியது.

61 அவர்கள் அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள் பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல் மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்யவிருந்த தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள்.

62 மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.

63 கில்கியாவும் அவர் மனைவியும் தங்கள் மகள் சூசன்னா பொருட்டுக் கடவுளைப் புகழ்ந்தேத்தினர். அவருடைய கணவர் யோவாக்கியமும் சுற்றத்தார் அனைவரும் அவ்வாறே புகழ்ந்தனர். ஏனெனில் தகாத செயல் எதுவும் அவரிடம் காணபடவில்லை.

64 அன்றுமுதல் மக்கள் தானியேலைப் பெரிதும் மதிக்கலாயினர்.

0 comments:

Post a Comment